செய்திகள்

ஜல்லிக்கட்டுக்காக திண்டுக்கல்லில் விடிய விடிய மாணவர்கள் போராட்டம்

Published On 2017-01-18 06:23 GMT   |   Update On 2017-01-18 06:23 GMT
ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதால் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்தது.

சென்னை, மதுரை, கோவை, நெல்லை நகரங்களை போல திண்டுக்கல்லிலும் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் பகுதியில் நேற்று மாலை கூடிய மாணவர்கள் அங்கு அமர்ந்து மத்திய அரசை கண்டித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர் அமைப்பினருக்கு தகவலை அனுப்பினர். இதனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நள்ளிரவை தொடர்ந்தும் நடந்த இந்த போராட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகளுடன் பெண்களும் பங்கேற்றனர்.

போராட்டம் நடத்தியவர்களுடன் இரவு 11.30 மணி அளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அலங்காநல்லூரில் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு காளைகள் வரும் வரை போராட்டம் நடைபெறும். அறவழியில் நடைபெறும் போராட்டத்தை தடுக்க வேண்டாம் என்று கூறினர்.

இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகு இரவு மின் தடை ஏற்படுத்தப்பட்டது. அப்போதும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. செல்போன் டார்ச் மூலம் வெளிச்சம் ஏற்படுத்தினர். அதன்பிறகு மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டது.

முன்னதாக ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றது. கொடைரோடு அருகில் உள்ள பள்ளப்பட்டியில் பீட்டா அமைப்பை கண்டித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழனி பஸ் நிலையம் ரவுண்டானா முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் சபரி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். மேலும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் விடுமுறைக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மாணவர்கள் கைகோர்த்து வரும் நிலையில் இன்று மேலும் பல கல்லூரி மாணவர்கள் போராட்ட களத்தில் குதிக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதன் காரணமாக போராட்டம் நடைபெறும் பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News