செய்திகள்

பள்ளிக்கரணை அருகே வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2017-01-04 12:28 IST   |   Update On 2017-01-04 12:28:00 IST
பள்ளிக்கரணை அருகே புத்தாண்டில் மதுகுடித்ததை கண்டித்த வாலிபரை முகமூடி கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவான்மியூர்:

பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் கூட்ரோடு கற்பக விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அறிவழகன் (வயது 36). சத்யம் தியேட்டரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி சுரேகா (24). இவர்களுக்கு 3 வயதில் சாதனா என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று இரவு அறிவழகன் வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார். இரவு 11 மணி அளவில் மர்ம கும்பல் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.

அறிவழகன் எழுந்து கதவை திறந்த போது முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் கொலைக்கும்பல் அறிவழகனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சுரேகா, கணவர் அறிவழகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் மர்ம கும்பலை தடுத்தார். ஆத்திரம் அடைந்த அவர்கள் சுரேகாவையும் சரமாரியாக வெட்டினர். அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

இதற்குள் அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயம் அடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுரேகாவுக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை மோசமாக உள்ளது.

புத்தாண்டையொட்டி அப்பகுதியில் சில வாலிபர்கள் மது அருந்தி இருக்கிறார்கள். அவர்களை அறிவழகன் தட்டி கேட்டு விரட்டி இருக்கிறார். இந்த மோதலில் அறிவழகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News