செய்திகள்

மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி

Published On 2017-01-01 12:41 IST   |   Update On 2017-01-01 12:41:00 IST
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

மாமல்லபுரத்தை அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நவீன்குமார் (25), சதாசிவம் (25), அமல்ராஜ்(26), இவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மாமல்லபுரத்திற்கு வந்தனர்.

பூஞ்சேரியை அடுத்த மாமல்லபுரம் டவுன் நுழைவு வாயில் அருகே சென்ற போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மினி லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நவீன் குமார், சதாசிவம் ஆகியோர் பலியானார்கள். படுகாயம் அடைந்த அமல்ராஜிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது நிலைமை மோசமாக உள்ளது.

கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள டிராக்டர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தவர் வெங்கடேஷ் (வயது 18). இவரது சொந்த ஊர் ஆந்திரமாநிலம் ஏலூர் கிராமம் ஆகும். நேற்று மாலை அவர் பயிற்சிக்காக வந்த நண்பர்கள் 6 பேருடன் கோவளத்திற்கு சுற்றுலா வந்தார். அனைவரும் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது ராட்சத அலை வெங்கடேசனை கடலுக்குள் இழுத்து சென்றது. அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தண்ணீரில் மூழ்கிய வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News