செய்திகள்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸ்: போலீசாரை கண்டதும் வாலிபர்கள் ஓட்டம்

Published On 2016-12-25 09:14 GMT   |   Update On 2016-12-25 09:14 GMT
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸ்சில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். இதனை அறிந்த பைக்ரேஸ் குழுவினர் தப்பி சென்று விட்டனர்.

மாமல்லபுரம்:

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேஸ் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் லட்ச கணக்கில் பணம் புரளுவதாக கூறப்படுகிறது.

பைக்ரேசை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி வீக்என்ட்ரேஸ், இ.சி.ஆர். பாய்ஸ், திருல்லர்ரோடு, ப்ளுசீ, கிங்ஆப் இ.சி.ஆர். என்ற பெயர்களில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பணம் வைத்து சூதாட்ட பைக்ரேஸ் நடந்து வருகிறது.

இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து அதிகாலையிலேயே ஏராளமானோர் பைக் ரேசுக்காக மாமல்லபுரம், இ.சி.ஆர். சாலைக்கு வந்தனர்.

அவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தனர். பைக்கின் சத்தம் மாமல்லபுரம் காவல் நிலையம் வரை கேட்டது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் சென்று பைக் ரேசில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர்.

இதனை அறிந்த பைக்ரேஸ் குழுவினர் சுற்றுலா பயணிகள் போல் நடித்து தப்பி சென்று விட்டனர். அவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கடந்த நவம்பர் 6-ந்தேதி கல்பாக்கத்தை அடுத்த குண்ணத்தூரில் நடந்த பைக்ரேஸ் விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

இதே போல் கடந்த ஆண்டு மாமல்லபுரம் அம்பாள் நகரை சேர்ந்த விவசாயி காமராஜ், பூஞ்சேரி கூட்ரோட்டை கடந்த போது ரேஸ் பைக் மோதி காயம் அடைந்தார். முதுகெலும்பு உடைந்த அவர் இன்னும் படுத்த படுக்கையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News