செய்திகள்
குடும்பத்துடன் வசந்தி (பழைய படம்)

ஈரோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2016-12-24 08:38 IST   |   Update On 2016-12-24 08:38:00 IST
ஈரோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சகுந்தலா. அவருடைய மகன் சரவணன் (வயது 30). இவருடைய மனைவி வசந்தி (25). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சரவணனுக்கும், வசந்திக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தர்சன் (1½) என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் சரவணன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்காக ஐதராபாத் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் வசந்தியும், சகுந்தலாவும், குழந்தை தர்சன் மட்டும் இருந்து வந்தனர். நேற்று மதியம் சகுந்தலா குழந்தை தர்சனுக்கு பால் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் சரவணன் வீட்டில் இருந்து தர்சன் அழும் சத்தம் வெகு நேரமாக கேட்டு கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது அங்கு வசந்தி மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டு இருந்தார். தொங்கிய அவரது கால்களை பிடித்தபடி பசியில் குழந்தை தர்சன் ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுது கொண்டிருந்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய வசந்தியை மீட்டனர். அப்போது அவர் இறந்ததுவிட்டது தெரியவந்தது. வசந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் வசந்திக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் கோபி சப்-கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News