செய்திகள்

மேலூரில் தாசில்தாரை தாக்கியதாக புகார்: மு.க. அழகிரி மீதான வழக்கு தள்ளிவைப்பு

Published On 2016-12-16 11:46 GMT   |   Update On 2016-12-16 11:46 GMT
மேலூர் கோர்ட்டில் நடந்து வரும் மு.க.அழகிரி மீதான வழக்கு வருகிற பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மேலூர்:

2011-ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது மேலூர் அருகே வல்லடிக்காரர் கோவிலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின்போரில் அதை அப்போதைய தாசில்தாரும், தேர்தல் அதிகாரியுமான காளிமுத்து விசாரிக்க சென்றார்.

அப்போது அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி, முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்பட 21 பேர் தன்னை தாக்கியதாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இன்று இந்த வழக்கு நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 21 பேரில், 11 பேர் ஆஜர் ஆனார்கள். மு.க.அழகிரி, மன்னன் உள்பட 10 பேர் இன்று ஆஜராகவில்லை.

அழகிரி தரப்பில் வக்கீல்கள் மோகன்குமார், எழிலரசு ஆகியோர் ஆஜரானார்கள். பின்னர் நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Similar News