செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாகசம்: ரோட்டில் தவறி விழுந்து 2 மாணவர்கள் பலி

Published On 2016-11-29 05:33 GMT   |   Update On 2016-11-29 05:33 GMT
மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த போது தவறி விழுந்து 2 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி:

திருவேற்காடு சிவசுந்தரம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஹரிகரன் (வயது 17) தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் அதே பகுதி ரத்தினம் அவன்யூவை சேர்ந்த நண்பர் பால கிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் தாம்பரம் நோக்கி சென்றார். பாலகிருஷ்ணன் ஐ.டி.ஐ படித்து வந்தார்.

இருவரும் பூந்தமல்லியை அடுத்த வடக்கு மலையம் பாக்கம் அருகே மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென இருவரும் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் அவர்களது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிகரனும், பால கிருஷ்ணனும் பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்த போது மாணவர்கள் விழுந்த இடத்தில் இருந்து பல அடி தூரத்துக்கு தள்ளி மோட்டார் சைக்கிள் கிடந்தது. விசாரணையில் அவர்கள் பைக்கில் சாகசம் செய்த போது தவறி விழுந்து இறந்து இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் தொடர்ந்து பைக் சாகசம், பைக்ரேஸ் நடந்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும் அப்பாவி வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவம் நடந்து உள்ளது. உயிரிழப்பும் ஏற்படுகிறது.

பைக்ரேசை தடுக்க ரோந்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News