செய்திகள்

சிவகிரி அருகே கணவன்-மனைவியிடம் கத்திமுனையில் நகை -பணம் பறிப்பு

Published On 2016-11-06 16:20 IST   |   Update On 2016-11-06 16:20:00 IST
சிவகிரி அருகே மொபட்டில் சென்ற கணவன்-மனைவியிடம் கத்திமுனையில் நகை ,பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

ஈரோடு:

சிவகிரிஅருகே உள்ள வ.கருக்கம் பாளையம் மாங்காடு புதூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்.விவசாயி. இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 55).

இவர்களது உறவினர் குப்புசாமிக்கு குழந்தை பிறந்து உள்ளதால் அவரது வீட்டுக்கு மொபட்டில் ஜெகநாதன் தனது மனைவி சம்பூர்ணத்துடன் சென்றார்.

அங்கு குழந்தையை பார்த்து விட்டு கணவன்- மனைவி இருவரும் தங்களது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

வீட்டின் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் இவர்கள் சென்ற போது வேகமாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

இவர்கள் ஜெகநாதன் ஓட்டி சென்ற மொபட் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி மறித்தனர். இதை பார்த்த ஜெகநாதன் அவர்கள் வழி தெரியாமல் வந்து விட்டார்கள் என்று நினைத்து , நீங்கள் யாரப்பா? இந்த வழியாக செல்ல தடம் இல்லை. எனவே வேறு வழியாக செல்லுங்கள் என்று கூறினார்.

ஆனால் அந்த வாலிபர்களோ திடீர் என்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெகநாதனின் வயிறு அருகே வைத்தனர்.

பிறகு அந்த ஆசாமிகள் ஒழுங்காக உங்களிடம் உள்ள நகை-பணத்தை கொடுத்து விடுங்கள்.இல்லை என்றால் கத்தியால் குத்திகொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

இதனால் ஜெகநாதனும், சம்பூர்ணமும் அதிர்ச்சி யடைந்தனர். வேறு வழியில்லாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று பயந்து போன சம்பூர்ணம் தனது கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க தாலி கொடியை கழற்றி மர்ம ஆசாமிகளிடம் கொடுத்தார். மேலும் கொள்ளையர்கள் மிரட்டியதால் ஜெகநாதன் தனது சட்டைப்பையில் வைத்திருந்த ரூ. 3 ஆயிரத்தையும் எடுத்து கொடுத்தார்.

இதன்பிறகு ஜெகநாதன் வந்த மொபட்டின் சாவியை எடுத்து கொண்டு அந்த 2 மர்ம ஆசாமிகளும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய ஆசாமிகளுக்கு சுமார் 25 வயதிருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை பறித்து சென்ற 2 ஆசாமிகளையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்தசம்பவம் சிவகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News