செய்திகள்

கொட்டும் மழையிலும் தீப திருவிழாவுக்கு தயாராகும் கார்த்திகை விளக்குகள்

Published On 2016-11-04 17:44 IST   |   Update On 2016-11-04 17:44:00 IST
மானாமதுரை மண்டபாண்ட தொழிற்கூடத்தில் இரவு பகலாக கொட்டும் மழையிலும் தீப விளக்குகளை தொழிலாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதிக அளவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.

வருகிற கார்த்திகை தீப திருவிழாவுக்கு வீடுகள் முழுவதும் விளக்கு ஏற்றுவார்கள். கோவில்களிலும் அதிக அளவில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதற்காக மானாமதுரை மண்டபாண்ட தொழிற்கூடத்தில் இரவு பகலாக கொட்டும் மழையிலும் தீப விளக்குகள், கிளியான்சட்டிகளை தொழிலாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.

திருமணம் முடிந்து புதுப்பெண்ணுக்கு சீர் வழங்க சரவிளக்குகள், விநாயகர் விளக்குகள் மற்றும் கேரளா விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு, அணையா தீபம் ஏற்ற குடுவை விளக்கு, மண்குத்து விளக்கு, அகல் விளக்கு மற்றும் கலை அரங்கு விடுதிகளில் வைக்க ரூம் விளக்குகள் என விதவிதமான விளக்குகளை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.

இதுபற்றி மண்பாண்ட கூட்டுறவு குடிசை தொழில் சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில் இந்த ஆண்டு அதிக அளவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. கார்த்திகை தீப விழாவுக்காக மழைக்கு முன்பே அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. உற்பத்தி விலைக்கே மானாமதுரையில் வந்து வியாபாரிகள், பொதுமக்கள் விரும்பிய விளக்குகளை வாங்கி செல்லலாம் என தெரிவித்தார்.

Similar News