வடகிழக்கு பருவமழை தொடக்கம்: அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி நிறுத்தம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 ஆயிரம் ஏக்கரிலும் கோடியக்காடு கடினல்வயல் பகுதியில் 6 ஆயிரம் ஏக்கரில் தனியார் நிறுவனமும் சாப்பாடு மற்றும் ரசாயண உப்பை தயார் செய்கின்றனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறும் வழக்கமாக ஜனவரி 2ம் வாரத்தில் உப்பு உற்பத்தி துவங்கப்பட்டு அக்டோபர் வரை சுமார் 9 மாதங்கள் உப்பு உற்பத்தி நடைபெறும். ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் முழு வீச்சில் உப்பு உற்பத்தி நடைபெறும். இத்தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும், சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாள்தோறும் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ரெயில் வசதி இல்லாத காரணத்தால் லாரி மூலமே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலத்திற்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இடைஇடையே பெய்த மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஆண்டு மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் பாதிக்கப்பட்டது. உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பிற்கு நல்ல விலை கிடைக்கும் என்றிருந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தினால் இங்கிருந்து கர்நாடகவிற்கு லாரிகள் செல்வது தடைப்பட்டது. இதனால் இந்தாண்டு வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியில் 40 சதவீதம் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது டன் ஒன்று 500 முதல் 600 வரை விற்பனை ஆகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உப்பு ஏற்றுமதி செய்யும் தொழிலாளர்கள் மட்டும் வேலை வாய்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தாங்கள் உற்பத்தி செய்த உப்பை மழையிலிருந்து பாதுகாக்கவும் விலை கூடும் என்ற நம்பிக்கையிலும் பனை மட்டை, பிளாஸ்டிக் தார் பாய்களை கொண்டு மூடி வைத்துள்ளனர்.
உப்பளத் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. ஆனால் இது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் மாற்றுத் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.
எனவே அவர்களின் நலன்கருதி மீனவர்களுக்கு வழங்குவது போல மழைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென உப்பளத் தொழிலாளர்கள் எதிர் பார்க்கின்றனர்.