செய்திகள்

சிவகங்கையில் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு டெங்கு பாதிப்பு: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2016-09-12 10:06 IST   |   Update On 2016-09-12 10:06:00 IST
சிவகங்கையில் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 3 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் இடையமேலூரைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது23). இவருக்கு அமுதா (20) என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 2 வாரங்களாக அன்பரசு-அமுதாவுக்கு தொடர் காய்ச்சல், இருமல், உடல் வலி ஆகியவை இருந்து வந்துள்ளது. 2 பேரும் இடையமேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.

இதையடுத்து இருவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் இருவருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அன்பரசு-அமுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களது குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை.

இதே ஊரைச் சேர்ந்தவர் முருகன் மகன் அண்ணாத்துரை (25). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்ததையடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கும் காய்ச்சல் குறையவில்லை.

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அண்ணாத்துரைக்கும் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கையை சேர்ந்த பழனிவேலு என்பவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு காய்ச்சல் குறைந்ததால் தற்போது வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News