செய்திகள்

தற்கொலை செய்வதாக மாணவர் மிரட்டியதால் அவருடன் சென்றேன்: கல்லூரி பேராசிரியை வாக்குமூலம்

Published On 2016-08-26 12:51 IST   |   Update On 2016-08-26 12:51:00 IST
சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே பிணமாக கிடந்த மாணவர் அரவிந்த் குமாரின் மரண வழக்கில் கல்லூரி பேராசிரியை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த காமராஜபுரம், காயத்ரி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அரவிந்தகுமார். கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. கடந்த 21-ந் தேதி அரவிந்த் குமார் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மாணவர் அரவிந்த் குமாருடன் அவர் படித்த கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்க்கும் 23-வயது பெண்ணும் ஓட்டம் பிடித்ததும், போலீசார் தேடுவதை அறிந்ததும் பேராசிரியை மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து கணவர்- மற்றும் 2 குழந்தையுடன் வாழும் பேராசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பேராசிரியை அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

அரவிந்த் குமார் பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்க அடிக்கடி என் வீட்டிற்கு வருவார். அப்போது எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் குமார் “நாம் இருவரும் வீட்டை விட்டு தனியாக சென்று புதிய வாழ்க்கை தொடங்கலாம். உன்னுடன் வாழ முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று மிரட்டி அடிக்கடி தொல்லை கொடுத்தான்.

எனவே அரவிந்த்குமாரை ஏதாவது ஊருக்கு அழைத்து சென்று மனதை மாற்றி அழைத்து வரலாம் என்று முடிவு செய்தேன்.

கல்லூரியில் இருந்து சுற்றுலா செல்வதாக கூறி புறப்பட்டோம். ரூ.1½ லட்சம் பணம், மற்றும் நகைகள் வைத்து இருந்தேன்.

முதலில் பாண்டிச்சேரிக்கு சென்றோம். பின்னர் மதுரை, தூத்துக்குடிக்கு சென்றோம். அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம்.

கணவர் மற்றும் குழந்தைகள் ஞாபகம் வந்ததால் சென்னைக்கு செல்லலாம் என்று அரவிந்த்குமாரிடம் கூறினேன். அவனும் சரி எனக்கூறினான்.

19-ந்தேதி திண்டிவனம் அருகே ஒரு ஓட்டலில் சப்ளையரிடம் செல்போன் வாங்கி எனது அம்மாவிடம் பேசினேன். அப்போது என்னை காணவில்லை என்று கணவர் போலீசில் புகார் செய்து இருப்பது தெரிந்தது.

இது பற்றி அரவிந்த் குமாரிடம் கூறிய போது “நான் இப்போது வந்தால் அவமானமாக இருக்கும், 2 நாட்கள் கழித்து வருகிறேன் என்றான்.

இதையடுத்து அவனிடம் ரூ.5 ஆயிரம் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.

இவ்வாறு அவர்கூறி உள்ளார்.

இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசாரிடம் கேட்ட போது, அரவிந்த்குமாரை பேராசிரியை தற்கொலைக்கு தூண்டினாரா? அல்லது அவமானத்தில் அவரே தற்கொலை செய்தாரா என்று விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக அரவிந்த் குமாருடன் படிக்கும் மாணவர் மற்றும் முன்னாள் மாணவரிடமும் விசாரணை நடக்கிறது.

விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Similar News