செய்திகள்

மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கு எப்போதும் என் ஆதரவு: மயிலாடுதுறையில் டி.ராஜேந்தர் பேச்சு

Published On 2016-08-01 11:34 IST   |   Update On 2016-08-01 11:34:00 IST
மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கு எப்போதும் என் ஆதரவு என மயிலாடுதுறையில் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் இளஞ்சிறகுகள் அமைப்பின் விழா நடைபெற்றது. இதில் நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசியதாவது:–

என்னை நாடு போற்றும் அளவிற்கு வளர்த்து அனைத்து தகுதிகளையும் அளித்த பிறந்த மண்ணை பாராட்ட வந்துள்ளேன். நான் எந்த மதத்திற்கும் சொந்தக்காரன் இல்லை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் மந்திரத்தை கற்றவன். நான் யாருக்கும் பயந்தவன் இல்லை. தனி மனித ஒழுக்கமானவன்.

இதற்கு காரணம் நான் படித்த தேசிய மேல்நிலைப்பள்ளி. ஒரு மாணவன் புகைப்பிடித்தான் என்பதற்காக கையில் அடித்து தீர்த்த தலைமை ஆசிரியரைப் பார்த்து வளர்ந்தவன். இதுவரை புகைப்பிடிப்பதை போன்று நடிக்காமலும், புகைப்பிடிக்காமலும் வாழ்ந்து வருவதற்கு என் பள்ளிதான் காரணம்.

மது போதையில் மயங்குகிறான் ஆங்கிலேயன். ஆனால் நாம் மதுவில் மூழ்கி விடுகிறோம். தொழில் பேசும் போது மதுவை சுவைக்கிறான் ஆங்கிலேயன். ஆனால் நம் தொழிலே தண்ணி அடிப்பதுதான்.

கையில் ஒரு காசு இல்லாமல் சென்னைக்கு சென்றேன். மயிலாடுதுறை அளித்த திறமையோடு சென்றேன். இன்றைக்கு நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அதற்கு காரணம் மயிலாடுதுறை மண்ணும் நான் வணங்கும் தெய்வமும் தான். மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களை மறக்காதீர்கள். அப்போதுதான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்.

வாழ்க்கையில் முயற்சிக்கும் போது உன்னை ஏசும். ஏளனம் செய்யும் உலகம். நீ முன்னேறினால் உன்னை பாராட்டும் உலகம் இது. மயிலாடுதுறை மாவட்டமாக வேண்டும். விஸ்திரமான பஸ் நிலையம் வேண்டும்.

மயிலாடுதுறை மண் மீத்தேனால் கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்று இந்த அமைப்பினர் குரல் எழுப்புகின்றனர். இந்த மண்ணுக்காக என் ஆதரவு எப்போதும் உண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News