செய்திகள்

தடையில்லா சான்றிதழ் தர தாமதம்: மாமல்லபுரத்தில் சிற்பங்கள் ஏற்றுமதி பாதிப்பு

Published On 2016-06-30 12:03 IST   |   Update On 2016-06-30 12:03:00 IST
சிற்பங்களுக்கு தடையில்லா சான்றை மாமல்லபுரத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிற்ப உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் சிற்பங்கள் வரலாற்று சிறப்பு பெற்றவை. உலகளவில் பழமைக் கால சிற்ப கலை என்ற வரலாற்று மதிப்பு இதற்கு உள்ளது.

மாமல்லபுரத்தில் தயாராகும் சிற்பங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு அன்னிய செலாவணி வருவாயும், தொழிலாளர்கள் நல்ல வருவாயும் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் சிற்ப ஆர்டர்களை முடித்தாலும் அதை வெளிநாட்டுக்கு அனுப்ப தொல்லியல் துறையின் தடையில்லா சான்று உடனடியாக கிடைக்காததால் அனுப்பமுடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தொல்லியல்துறை அலுவலகம் மாமல்லபுரத்தில் இருந்தும் சிற்பங்களை பரிசோதிக்க சென்னை தலைமை செயலகத்தில் உள்ள மத்திய தொல்பொருள் அலுவலகத்துக்கு கொண்டு வர அதிகாரிகள் கூறுவதாக தெரிகிறது.

தொழிலாளர்கள் சிலைகளை பாதுகாப்பாக அங்கு கொண்டு சென்ற பிறகும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் தாமதப்படுத்துவதாக சிற்பம் செய்யும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனால் டாலர் மதிப்பு குறைவது, கடன் வட்டி கூடுதல் என பல இன்னல்களுக்கு மாமல்லபுரம் சிற்பிகள் ஆளாகின்றார்கள்

எனவே சிற்பங்களுக்கு தடையில்லா சான்றை மாமல்லபுரத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிற்ப உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News