செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு பாதியில் நிற்கும் திட்டங்களை முடிக்கவேண்டும்: தா.மோ.அன்பரசன் வலியுறுத்தல்

Published On 2016-06-29 13:31 IST   |   Update On 2016-06-29 13:31:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு பாதியில் நிற்கும் திட்டங்களை முடிக்க வேண்டும் என்று மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தி உள்ளார்.
குன்றத்தூர்:

காஞ்சிபுரம் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தா.மோ.அன்பரசன், சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த்ரமேஷ், புகழேந்தி, எழிலரசன், அரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் இக்கூட்டத்தில் பேசியதாவது:-

கலைஞர் ஆட்சியில் திட்டமிடப்பட்டு ரூ.4.75 கோடி செலவில் அடையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்து கடந்த 4 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் தடைபட்டு போய் நிற்கிறது.

அனகாபுத்தூர் அருகே பாலம் முடியும் இடம் விமானப்படைக்கு சொந்தமான இடம் என்பதால் பணிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது.

திருப்போரூர் நெமிலி இடையே பக்கிங்காம் கால்வாய் குறுக்கே ரூ.4.75 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளும் தடைப்பட்டு நிற்கிறது.

அய்யப்பன்தாங்கல்-பரணிபுத்தூர்- மெளலிவாக்கம்- முகலிவாக்கம்-மதனந்தபுரம்-கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழைக் காலங்களில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் இப்பகுதியில் வெளியேறுவதற்கு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் 5 அடிக்கு மேல் தேங்கி நிற்கும் நிலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கடந்த கலைஞர் ஆட்சியின் போது ரூ.18 கோடி மதிப்பீட்டில் மணப்பாக்கத்தான் கால்வாய் வழியாக இவ்வெள்ள நீரை வெளியேற்ற திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டு கால்வாய் பணிகள் பாதியில் நிற்கிறது.

குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள சாலைகள் நாபார்டு திட்டத்தின் கீழ்அய்யப்பன் தாங்கல்-குன்றத்தூர் சாலை ரூ.1.60 கோடி மதிப்பீட்டிலும், கோவூர்-தண்டலம் சாலை ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், கொளப்பாக்கம்-சித்தாத்தூர் சாலை ரூ.1 கோடி மதிப்பீட்டிலும் அய்யப்பன் தாங்கலில் மழைநீர் வடிக்கால் கால்வாய் ரூ.92 லட்சம் மதிப்பீட்டிலும் மெளலிவாக்கத்தில் மழைநீர் வடிக்கால் கால்வாய் ரூ.95 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் இத்திட்டங்களுக்கு உடனே நிர்வாக அனுமதி வழங்கி சாலை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

மெளலிவாக்கம் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்த பகுதிக்கு அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி மூடப்பட்டுள்ளது. அப்பள்ளியில் படித்த 600 மாணவ-மாணவிகள் தற்போது மெளலிவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

காலை ஷிப்டில் தொடக்கப் பள்ளி மாணவர்களும், மாலை ஷிப்டில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் பயின்று வருகின்றனர். மூடப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப்பள்ளியை இயக்கிட வேண்டும் அல்லது அரசு ஆதிதிராவிடர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும்

கெருகம்பாக்கம்-கவுல்பஜார் இடையே அடை யாற்றின் குறுக்கே மேம்பாலம் உடனே அமைத்து தர வேண்டும். ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப் பள்ளி அருகே ரெயில்வே சுரங்கப் பாதை அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News