செய்திகள்

பள்ளிக்கு சென்ற போது மாயமான சென்னை மாணவிகள் 3 பேர் மும்பையில் மீட்பு

Published On 2016-06-29 08:36 IST   |   Update On 2016-06-29 08:36:00 IST
சென்னை மடிப்பாக்கத்தில் பள்ளிக்கூடம் சென்ற போது மாயமான மாணவிகள் 3 பேர் மும்பை ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த மூவரசம்பட்டு மற்றும் பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தோழிகளான 3 பேர் மூவரசம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் ஒன்றாக பள்ளிக்கூடத்திற்கு சென்று வருவார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவிகள் 3 பேரும் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதாக கூறி காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு மாலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் தனித்தனியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது பள்ளி நிர்வாகம் மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவிகள் மாயமானது குறித்து அவர்களது பெற்றோர் மடிப்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் எங்காவது சென்றார்களா? அல்லது மர்மநபர்களால் கடத்தப்பட்டார்களா? என தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாயமான மாணவிகள் 3 பேரும் மும்பை ரெயில் நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மாணவிகளை மீட்டு அழைத்து வருவதற்காக சென்னை போலீசார் மும்பைக்கு விரைந்து உள்ளனர்.

அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகு தான் அவர்கள் தாமாக சென்றார்களா? அல்லது கடத்தி செல்லப்பட்டனரா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

Similar News