செய்திகள்

பள்ளிக்கு மது அருந்தி விட்டு வந்த 9-ம் வகுப்பு மாணவர் இடைநீக்கம்

Published On 2016-06-24 09:16 IST   |   Update On 2016-06-24 09:16:00 IST
பள்ளிக்கு மது அருந்தி விட்டு வந்து வாந்தி எடுத்த 9-ம் வகுப்பு மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆலந்தூர்:

சென்னை வேளச்சேரி ராஜலட்சுமி நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் தள்ளாடியபடியே பள்ளிக்கு வந்தார்.

கால்கள் நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வந்த அவர், வகுப்பறைக்கு செல்லாமல் தலைமை ஆசிரியர் அறை முன்பு சென்ற போது திடீரென வாந்தி எடுத்தார்.

இதனால் சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்து, வாந்தி எடுத்த மாணவரை பார்த்தனர். அப்போது அந்த மாணவர் மது அருந்தி விட்டு போதையில் பள்ளிக்கு வந்து இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த மாணவரை இடைநீக்கம் செய்த தலைமை ஆசிரியர், இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

9-ம் வகுப்பு படிக்கும் மாணவர், பள்ளிக்கூடத்துக்கு மது அருந்தி விட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவது வேதனை அளிப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Similar News