தனித்து போட்டியா – கூட்டணியா?: 22–ந்தேதிக்குள் முடிவு அறிவிப்பேன் - வேல்முருகன் பேட்டி
நெய்வேலி, ஏப். 13–
தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் உள்ளோமா, இல்லையா? என்று தெரியாத சூழ்நிலை உருவானதால் அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறினோம். இதையடுத்து எந்த அரசியல் கட்சிகளும் எங்களோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுவதா– கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்று சூழ்நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவின்படி வருகிற 22–ந் தேதிக்குள் முடிவை அறிவிப்பேன்.
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் கூட்டணிகள் மாற வாய்ப்பு உள்ளது. எனவே, நாங்கள் கூட்டணி குறித்த முடிவுகளுக்காக சற்று பொறுத்து இருக்கிறோம்.
புதுவையில் 2 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் பா.ம.க.– தி.மு.க.,மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.