ஓசூரில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
- பட்டாசு கடை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது.
- யாராவது அனுமதியின்றி விற்பனை செய்கிறார்களா? என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஓசூர்:
தமிழக-கர்நாடகா மாநில எல்லையான பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அத்திப்பள்ளியில் ஒரு பட்டாசு கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பட்டாசு கடை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது.
மேலும், விதிமுறைகளை மீறி யாராவது பட்டாசுகளை பதுக்கி விற்பனை செய்தல், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும் மாவட்டத்தில் யாராவது அனுமதியின்றி விற்பனை செய்கிறார்களா? என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே ஜுஜுவாடி திருவள்ளுவர் நகரில் முறையான அரசு அனுமதியின்றி, 85 அட்டைப் பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது40) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்து, பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், நேற்று தொடர் நடவடிக்கையாக அதே பகுதியில், போலீசார் அதிரடி ஆய்வு செய்து, தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 32 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகளை அனுதியின்றி பதுக்கிவைத்திருந்ததாக வெங்கட விஜயன் (28) என்பவரை போலீசார் கைது செய்து, பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.