தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் 131 பெண் ஊழியர்கள் நீக்கம்- மாநகராட்சி நடவடிக்கை

Published On 2022-12-06 09:46 GMT   |   Update On 2022-12-06 09:46 GMT
  • நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சி மூலம் 400 அம்மா உணவகங்கள் நடத்தப்படுகின்றன. ஆதரவற்றவர்கள், ஏழை-எளியவர்கள், கூலி தொழிலாளர்கள் அம்மா உணவகத்தை நம்பி வாழ்வதால் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் 2 ஷிப்டு முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில அம்மா உணவகங்களில் உணவு இல்லை என்று ஊழியர்கள் சொல்வதால் தற்போது விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் அங்கு வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லாத அளவிற்கு விற்பனை செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 60 வயதை கடந்த பெண் ஊழியர்கள் அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவது தெரிய வந்தது. அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 60 வயதை கடந்தவர்கள் எத்தனை பேர் பணி செய்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தியதில் 131 பேர் என தெரியவந்தது.

அவர்கள் அனைவரையும் கடந்த 1-ந்தேதி முதல் பணியில் இருந்து நீக்கவும் செய்துள்ளனர். இதனால் காலி இடங்கள் ஏற்படும்பட்சத்தில் அதனை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News