தமிழ்நாடு

திருப்புவனம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட நிசும்பன் சூதனி-விநாயகர் சிலைகள்

திருப்புவனம் அருகே முற்கால, பிற்கால பாண்டியர் கால விநாயகர்-நிசும்பன்சூதனி சிற்பங்கள் கண்டுபிடிப்பு

Published On 2023-05-31 09:57 GMT   |   Update On 2023-05-31 09:57 GMT
  • சிற்பத்தின் அருகில் முற்கால பாண்டியர் கால விநாயகர் சிற்பமும் இடம்பெற்றுள்ளது.
  • 1000 ஆண்டுகள் பழமையான இந்த விநாயகர் லலிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளது.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள திருமணப்பதி கிராமத்தில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் முனைவர் தங்கமுத்து ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு முற்கால பாண்டியர் கால விநாயகர் மற்றும் பிற்கால பாண்டியரின் கலைப்பாணியில் அமைந்த நிசும்பன்சூதனி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

இங்கு கண்டு பிடிக்கப்பட்ட நிசும்பன் சூதனி சிற்பம் 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட ஒரே பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் பகுதிக்கு 4 கரங்கள் வீதம் 8 கரங்களை கொண்டுள்ளது.

இந்த கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கேடயம், வில், அம்பு, மணி போன்ற ஆயுதங்களைத் தாங்கியபடி சிற்பம் கம்பீரமான தோற்றத்தில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தலையில் மகுடத்துடன் கூடிய ஜடாபாரத்துடனும், கழுத்தில் ஆபரணங்களுடனும், தோள் மாலை, தோள் வளை செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் காதில் பத்ர குண்டலத்தை அணிகலன்களாக அணிந்தபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் கச்சை அணிந்தபடி வலது காலை பீடத்தில் குத்த வைத்தும், இடது காலை நிசும்பன் மீது வைத்தும் உத்குதிகாசனக் கோலத்தில் சிற்பம் பிற்காலப் பாண்டியரின் கைவண்ணத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பத்தின் அருகில் முற்கால பாண்டியர் கால விநாயகர் சிற்பமும் இடம்பெற்றுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த விநாயகர் லலிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளது. விநாயகருக்கு 4 கரங்கள் உள்ளன.

அதில் பின் வலது கரத்தில் மழுவும், இடது கரத்தில் பாசக்கயிரும், முன் வலது கரத்தில் உடைந்த தந்தமும், இடது கரத்தில் மோதகமும், அதை தும்பிக்கையால் எடுத்தபடியும் உள்ளது.

வயிற்றில் உதரபந்தம் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பம் மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இந்த ஊரில் ஒரே இடத்தில் இந்த சிற்பங்கள் கிடைத்துள்ளதைப் பார்க்கும்போது வரலாற்றில் திருமணப்பதி கிராமம் சிறந்து விளங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News