விளையாட்டு

இதற்குத்தானா இவ்வளவு பில்டப்..? சமூக வலைத்தளத்தில் டோனி வெளியிட்ட அறிவிப்பு இதுதான்

Published On 2022-09-25 11:05 GMT   |   Update On 2022-09-25 11:05 GMT
  • டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
  • இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர். டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியானது. மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் சில ரசிகர்கள் கணித்தனர்.

ஆனால் இந்த யூகங்களுக்கு எல்லாம் மாறாக, பேஸ்புக் நேரலையில் அவர் அறிவித்த விஷயம், இதெல்லாம் ஒரு விஷயமா? என்று ரசிகர்களை பேச வைத்தது. சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டோனி, ஓரியோ பிஸ்கட் ஒன்றை அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்றார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தியாவில் டோனி மீண்டும் ஓரியோவை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்ட் முன்னதாக 2011 இல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இன்றைய பிராண்ட் விளம்பரத்தில், முந்தைய வெளியீடு மற்றும் உலகக் கோப்பை வெற்றியை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டார். இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். தனது பிராண்ட் விளம்பரத்திற்காக, தன்னை பின்தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்களை பயன்படுத்தியிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. இதற்காக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News