விளையாட்டு

அஸ்வினுக்கு முன்பாக டோனி களம் இறங்கியிருக்க வேண்டும்- வாட்சன்

Published On 2025-03-30 10:09 IST   |   Update On 2025-03-30 10:09:00 IST
  • ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது.
  • டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார்.

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றது.

இந்த ஆட்டத்தில் டோனி 9-வது வீரராக களம் இறங்கி 16 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 30 ரன் எடுத்தார். அவர் முன்னதாக களம் இறங்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. அஸ்வினுக்கு முன்னதாக கூட ஆட வராதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டோனி முன்னதாக களம் இறங்க வேண்டும் என்று டெலிவிசன் வர்ணனையாளரும், சி.எஸ்.கே. முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் ஜியோ ஹாட் ஸ்டார் நிகழ்ச்சியில் இது தொடர்பாக கூறியதாவது:-

ஆர்.சி.பி.க்கு எதிராக டோனி 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார். இதைப் பார்க்கத்தான் சி.எஸ்.கே. ரசிகர்கள் வருகிறார்கள். அவர் முன்னதாக களம் இறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த ஆட்டத்தில் அஸ்வினுக்கு முன்பாக டோனி களம் இறங்கியிருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை அவர் சந்தித்து இருக்க வேண்டும். கடைசி சில ஆண்டுகளில் தன்னால் அதிரடியாக விளையாட முடியும் என்று தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்.

டோனி இன்னும் முன்னதாக களமிறங்கினால் அவரது திறமையை அதிகமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது. ருதுராஜ் சிறப்பான தொடக்க வீரர். ருதுராஜ் அழுத்தத்தில் ஆடினார். சாம் கரணை 5-வதாக ஆட வைப்பதும் கேள்விக்குறியே. 7-வது வரிசையில் விளையாட வைக்கலாம்.

தற்போதைக்கு, சி.எஸ்.கே. அணியில் சமநிலை இல்லை. டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கியிருந்தால் வென்று இருக்கலாம்.

இவ்வாறு வாட்சன் கூறினார்.

Tags:    

Similar News