விளையாட்டு

ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டன்?

Published On 2025-02-06 11:29 IST   |   Update On 2025-02-06 11:29:00 IST
  • இரு தொடர்களிலும் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது.
  • இந்திய அணி ஜூன் மாதம் முதல் ஜூலை வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

மும்பை:

இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித்சர்மா கேப்டனாக பணியாற்றினார்.

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் கடந்த ஜூன் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித்சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு அவர் கேப்டனாக நீடித்து வருகிறார். 20 ஓவர் அணிக்கு சூர்ய குமார் யாதவ் கேப்டனாக உள்ளார்.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலிய பயணத்திலும் டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த இரு தொடர்களிலும் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றுகிறார். சாம்பியன்ஸ் டிராபியோடு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) திட்டமிட்டது. ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடாத போது அவர் கேப்டனாக பணியாற்றினார். இதனால் எதிர்காலத்தில் பும்ராவே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இதற்கிடையே பி.சி.சி.ஐ.யின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பும்ராவின் உடல் தகுதி குறித்து அடிக்கடி கேள்வி எழுகிறது. கேப்டன் பதவியில் அவரது பந்து வீச்சுத் திறன் பாதிக்கப்படலாம் என்று கருதுகிறது. இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு ரிஷப் பண்ட் அல்லது ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் சுப்மன் கில்லும் இதற்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய அணி ஜூன் மாதம் முதல் ஜூலை வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக உள்ளார். இங்கிலாந்து தொடருக்கு அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ரோகித் சர்மா ஓய்வு பெறும்போது சுப்மன் கில் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Tags:    

Similar News