விளையாட்டு
null

ரொனால்டோ அப்படி எதுவும் கூறவில்லை... அவரை விட்டுவிடுங்கள்... செய்தியாளர் சந்திப்பில் விளக்கிய பயிற்சியாளர்

Published On 2022-12-10 10:07 GMT   |   Update On 2022-12-10 10:27 GMT
  • போர்ச்சுக்கல் வீரர்கள் அடித்த அனைத்து கோல்களையும் ரொனால்டோ கொண்டாடினார்.
  • ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.

தோஹா:

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், கோல் மெஷின் என அழைக்கப்படும் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோ (வயது 37), களமிறக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்துடனான போட்டி தொடங்கியபோது, தேசிய அணியில் இருந்து விலகப் போவதாக மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோசுடனான உரையாடலின்போது இதனை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு விளக்கம் அளித்தது. அதில், "கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த நேரத்திலும் கத்தாரில் தேசிய அணியை விட்டு வெளியேறுவதாக மிரட்டவில்லை. அவர் தேசிய அணிக்காகவும் நாட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சாதனையை உருவாக்குகிறார். இதை மதிக்க வேண்டும்" என கூறியிருந்தது.

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரொனால்டோ குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டி நடைபெற்ற நாளில் மதிய உணவுக்குப் பிறகு ரொனால்டோவை எனது அலுவலகத்திற்கு அழைத்தேன். அவர் எப்போதும் ஆரம்பத்திலேயே களமிறங்கியதால், நான் எடுத்த முடிவு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

இது ஒரு நல்ல யோசனை என்று நினைக்கிறீர்களா? என என்னிடம் கேட்டார். இந்த உரையாடல் சாதாரணமாகவே இருந்தது. நான் எனது கருத்துக்களை விளக்கினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார். வெளிப்படையாகவும் சாதாரணமாகவும் உரையாடினோம். அப்போது அவர் தேசிய அணியை விட்டு வெளியேற விரும்புவதாக என்னிடம் ஒருபோதும் கூறவில்லை.

அவர் தனது சக வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்தார். மேலும் நாங்கள் அடித்த அனைத்து கோல்களையும் கொண்டாடினார். இறுதியில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சக வீரர்களை அழைத்தார். அவரை விட்டுவிடுங்கள். அவரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், 90 சதவீத கேள்விகள் அவரைப் பற்றியே இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரொனால்டோவுக்கு பதிலாக களமிறங்கிய ஸ்ட்ரைக்கர் கோன்கலோ ராமோஸ் (21) ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

எனினும், இன்று மொராக்கோவுடனான காலிறுதி ஆட்டத்தில் ரொனால்டோவுக்கான கதவு திறந்திருக்கிறது என பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார். இது வித்தியாசமான ஆட்டமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த வீரராக இருந்தாலும், களத்தில் இறக்கப்படாமல் மாற்று வீரராக வெளியில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்றும் பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார்.

Tags:    

Similar News