விளையாட்டு

தேசிய சீனியர் தடகள போட்டி: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம்

Published On 2025-08-20 10:54 IST   |   Update On 2025-08-20 10:54:00 IST
  • 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • இன்று காலை 10 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம் நடைபெற்றது.

சென்னை:

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது தேசிய சீனியர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.

24-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இறுதி தேர்வு என்பதால் இந்தப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச வீரர் அபிஷேக் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 30 நிமிடம் 56.54 வினாடியில் கடந்தார்.

கர்நாடகாவை சேர்ந்த சிவாஜி பர்சு மடப்பகோதரா 30 நிமிடம் 57.69 வினாடியில் கடந்து 2-வது இடத்தையும், மற்றொரு உத்தரபிரதேச வீரர் ஷிவம் 30 நிமிடம் 59.14 வினாடியில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். அதைத் தொடர்ந்து தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.

இன்று மாலை ஆண்களுக்கான போல் வால்ட், பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் (4 கிலோ), டிரிபிள் ஜம்ப், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

அதோடு பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டமும் (இரவு 7.25), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டமும் (இரவு 7.35) நடக்கிறது. மொத்தம் 6 பதக்கத்துக்கான போட்டிகள் மாலை முதல் இரவு வரை நடக்கிறது.

Tags:    

Similar News