மெஸ்ஸி வருகை.. மைதான வன்முறை - இந்திய கால்பந்து சம்மேளனம் விளக்கம்
- அவரை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 டிக்கெட் எடுத்து ரசிகர்கள் திரண்டனர்.
- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார்.
அர்ஜன்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். முதற்கட்டமாக மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவுக்கு சென்றார்.
இன்று அங்கு சால்ட் லேக் விவேகானந்தா யுவ பாரதி மைதானத்தில் மெஸ்ஸி வருகை தந்த நிலையில் அவரை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 டிக்கெட் எடுத்து ரசிகர்கள் திரண்டனர்.
ஆனால் மைதானத்தில் மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் ஏராளமானோர் நின்றதால் அவரை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் பாட்டில்களை மைதானத்தில் வீசி அமளியில் ஈடுபட்டனர். போலீசார் தடையடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
மெஸ்ஸி மைதானத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு உடனே வெளியேறினார். இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய மேற்கு வங்க ஆளுநர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கால்பந்து சம்மேளனம் AIFF, "விவேகானந்தா யுவ பாரதி மைதானத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இது ஒரு தனியார் PR நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு.
அதன் திட்டமிடல், மேலாண்மை அல்லது செயல்படுத்தலில் AIFF எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை. இந்த நிகழ்வின் விவரங்கள் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, மேலும் எங்களிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.