விளையாட்டு

தங்கப்பதக்கத்துடன் தமிழக கைப்பந்து அணியினர்

கேலோ இந்தியா விளையாட்டு: கைப்பந்தில் தமிழகம் தங்கம் வென்றது

Published On 2024-01-29 04:46 GMT   |   Update On 2024-01-29 04:46 GMT
  • கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
  • பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

சென்னை:

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.

நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.

நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.

Tags:    

Similar News