ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் ஜெர்மனி- அயர்லாந்துடன் இன்று மோதல்
- ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- 2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
வருகிற 10-ந் தேதி வரை இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்று உள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.
4-வது நாளான இன்று பிற்பகலில் மதுரையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள ஜெர்மனி-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-0 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் கனடாவை 7-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் கனடாவை (4-3) வென்றது. அடுத்து தென் ஆப்பிரிக்காவிடம் (1-2) தோற்றது.
2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டிகளில் 'சி' பிரிவில் உள்ள நியூசிலாந்து-ஜப்பான் (மாலை 5.45 மணி), அர்ஜென்டினா-சீனா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.
அர்ஜென்டினா, நியூசிலாந்து, அணிகள் 1 வெற்றி, 1 டிராவுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஜப்பான் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. சீனா 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.
இந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதியில் நுழைய அர்ஜென்டினா, நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி ஆட் டத்திலும் வெற்றி பெறும் போது இரு அணிகளும் தலா 7 புள்ளிகளை பெறும் கோல்கள் அடிப்படையில் முடிவு நிர்ணயம் செய்யப் படும்.