கால்பந்து

ஈரான் பெண்கள் கால்பந்து அணிக்கு ஆஸ்திரேலியா அடைக்கலம்: திடீரென மனமாறிய 3 பேர்..!

Published On 2026-03-15 11:24 IST   |   Update On 2026-03-15 11:24:00 IST
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் விளையாடினர்.
  • ஈரான் தண்டன் மற்றும் போர் காரணமாக சொந்த நாடு திரும்ப அச்சம் நிலவியது.

ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் மகளிர் கால்பந்து அணியினர் ஆஸ்திரேலியா சென்றனர். தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின்போது, ஈரான் வீராங்கனைகள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மறுத்தனர். ஈரானில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்ததாகக் கருதப்பட்டது.

இந்தச் செயலால் ஈரானிய அரசு ஊடகங்கள், வீராங்கனைகளை "யுத்த காலத் துரோகிகள்" என்று விமர்சித்தன. அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தென் கொரியாவுடன் நடந்த போட்டிக்கு பிறகு நடந்த அடுத்த இரண்டு போட்டிகளில் வீராங்கனைகள் ஈரான் தேசிய கீதத்தைப் பாடினர். ஈரான் மகளிர் கால்பந்து அணியினர் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட இருந்தனர்.

ஆனால் வீராங்கனைகள் ஈரான் திரும்பினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உலகளவில் எழுந்தது. மேலும் ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல் நிலைமையை இன்னும் மோசமாக்கின.

இதனால் ஈரான் மகளிர் கால்பந்து அணியினர், மீண்டும் ஈரான் திரும்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்தார்.

இது தொடர்பான டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதவில், ஈரான் தேசிய மகளிர் கால்பந்து அணியை ஈரானுக்குத் திருப்பி அனுப்ப அனுமதிப்பதன் மூலம் ஆஸ்திரேலியா ஒரு பயங்கரமான மனிதாபிமானத் தவறைச் செய்கிறது. அங்கு அவர்கள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதைச் செய்யாதீர்கள், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் (ஆண்டனி அல்பானீஸ்), அவர்களுக்கு அடைக்கலம் கொடுங்கள். நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் அமெரிக்கா அவர்களை ஏற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே ஆஸ்திரேலியா ஈரான் வீராங்கனைகள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்தன.

ஆனால் வீராங்கனைகள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப் என 7 பேர் மட்டும் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கேட்டனர். மற்றவர்கள் மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் 7 பேரில் இரண்டு வீராங்கனைகள் ஒரு ஸ்டாஃப் என 3 பேர் திடீரென சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என மனம் மாறியுள்ளனர். இது தொடர்பாக ஆஸ்திரேலியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் நேற்றிரவு ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

மலேசியா சென்ற ஈரான் அணி, இன்னும் அங்கேதான் இருக்கிறது. அவர்களுடன் இந்த 3 பேரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News