இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் - இங்கிலாந்து கேப்டன் நாட் சிவெர்
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
- இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்தது.
- வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணியும், அதேநேரத்தில் அரையிறுதியை உறுதிப்படுத்த இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டும்.
இந்தூர்:
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இந்தூரில் இன்று நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்தது. அடுத்து தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. முந்தைய ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 330 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியை அதற்குள் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியது. 6-வது சிறப்பு பந்து வீச்சாளரை சேர்க்காதது இந்திய அணிக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி அதிகரிப்பதுடன் அரையிறுதி வாய்ப்பும் சிக்கலாகும்.
இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீல் தியோல், ரிச்சா கோஷ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்சிடம் இருந்து இன்னும் கணிசமான பங்களிப்பு வரவில்லை. பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, கிரந்தி கவுட், சினே ரணா, ஸ்ரீ சரனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி தனது முதல் 3 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை அணிகளை வரிசையாக பதம் பார்த்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டத்தில் 78 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து மழையால் தோல்வியில் இருந்து தப்பியது. இங்கிலாந்து இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அரையிறுதியை உறுதி செய்து விடும்.
இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் கேப்டன் நாட் சிவெர், ஹீதர் நைட், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், லின்ட்சே சுமித்தும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணியும், அதேநேரத்தில் அரையிறுதியை உறுதிப்படுத்த இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 79 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 41-ல் இங்கிலாந்தும், 36-ல் இந்தியாவும் வென்றுள்ளன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி, ரேணுகா சிங்.
இங்கிலாந்து: அமே ஜோன்ஸ், டாமி பீமோன்ட், ஹீதர் நைட், நாட் சிவெர் (கேப்டன்) சோபியா டங்லி, எம்மா லாம்ப், அலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபி எக்லெஸ்டோன், லின்ட்சே சுமித், லாரென் பெல்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.