கிரிக்கெட் (Cricket)

நிதிஷ்குமாரை ஆல்ரவுண்டர் என்று சொன்னது யார்? ஸ்ரீகாந்த் சரமாரி கேள்வி

Published On 2025-11-26 10:46 IST   |   Update On 2025-11-26 10:46:00 IST
  • அவரது பந்து வீச்சை பார்த்து யாராவது ஆல்-ரவுண்டர் என்று சொல்வார்களா.
  • அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஸ்விங் இல்லை. மெச்சத்தகுந்த பேட்ஸ்மேனும் கிடையாது.

மும்பை:

உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அணித் தேர்வை முன்னாள் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் கடுமையாக குறைகூறியுள்ளார்.

அவர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'ஒரு டெஸ்ட் முடிந்ததும் அடுத்த போட்டியில் யாராவது ஒருவரை அறிமுக வீரராக இறக்குகிறார்கள். அவர்கள் சோதனை முயற்சி என்று சொல்லி தவறு செய்கிறார்கள். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் விரும்பியதை சொல்லிவிட்டு போகட்டும். அது பற்றி எனக்கு கவலையில்லை. நான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். தேர்வு குழுவின் முன்னாள் தலைவர். எனக்கு என்ன பேச வேண்டும் என்பது தெரியும்.

அணித் தேர்வில் தொடர்ந்து சீரான தன்மை இருக்க வேண்டியது அவசியம். கவுகாத்தி டெஸ்டுக்கு ஆல்-ரவுண்டர் என்ற பெயரில் நிதிஷ்குமார் ரெட்டியை கொண்டு வந்தார்கள். நிதிஷ்குமாரை ஆல்-ரவுண்டர் என்று சொன்னது யார்? அவரது பந்து வீச்சை பார்த்து யாராவது ஆல்-ரவுண்டர் என்று சொல்வார்களா? மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்தார்.

அதன் பிறகு என்ன செய்து விட்டார். அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஸ்விங் இல்லை. மெச்சத்தகுந்த பேட்ஸ்மேனும் கிடையாது. அவர் எப்படி ஒரு நாள் போட்டி அணியிலும் இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாகவா? என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நிதிஷ்குமாரை நீங்கள் ஆல்-ரவுண்டர் என்று வர்ணித்தால், நான் அவரை விட சிறந்த ஆல்-ரவுண்டர் என்று சொல்ல முடியும். அக்ஷர் பட்டேலுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அனைத்து மட்டத்திலும் சீராக ஆடும் அவரை ஏன் நீக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News