264 ரன்களை குவித்தபோது எனது தந்தை கொடுத்த ரியாக்ஷன் இதுதான்- ரோகித் சர்மா
- என் தந்தை எப்போதும், டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி பிரியம் கொண்டுள்ளார்.
- அவருக்கு புதிய தலைமுறை கிரிக்கெட் பிடிக்காது.
இந்திய வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் திடீரென ஓய்வை அறிவித்தது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரோகித் சர்மா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். சத்தீஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய "கிரிக்கெட்டர் மனைவியின் டைரி" என்ற புத்தகத்தை வெளியிட்ட ரோகித் சர்மா அந்த நிகழ்வில் தனது தந்தை பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது, தனது தந்தைக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி மரியாதை உண்டு என தெரிவித்தார்.
இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-
என் தந்தை போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றினார். என் தாய் என்ன செய்தார் என்பதை நான் கூறியிருந்தேன். அதை போன்றே என் தந்தை நாங்கள் தற்போது வாழும் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்களை செய்திருக்கிறார். என் தந்தை எப்போதும், டெஸ்ட் கிரிக்கெட் மீது தனி பிரியம் கொண்டுள்ளார்.
அவருக்கு புதிய தலைமுறை கிரிக்கெட் பிடிக்காது. நான் ஒருநாள் போட்டிகளில் 264 ரன்களை அடித்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. அன்றைய தினம் போட்டிக்கு பிறகு அவரை சந்தித்தேன். அப்போது அவர் எல்லாம் சரி, நன்றாக விளையாடினாய் என்று கூறினார். எனினும், அவரது பாராட்டில் எவ்வித சுவாரஸ்யமும், அதீத மகிழ்ச்சியம் காணப்படவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் 30, 40, 50 அல்லது 60 ரன்களை குவித்தால் கூட அவர் அதைப் பற்றி விரிவாக என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். அவர் டெஸ்ட் கிரிக்கெட் மீது அத்தகைய காதல் கொண்டிருந்தார். அவர் எப்படியிருந்தாலும், முன்னேற வேண்டும் என்றே விரும்புவார் என ரோகித் கூறினார்.