87 ரன்களுக்கு 1 விக்கெட்... அடுத்த 51 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்: தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
- 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
- 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்தது.
கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மிகவும் பொறுமையுடன் விளையாடிய இந்த தொடக்க ஜோடியை ஜேக்கப் டஃபி பிரித்தார். பிரெண்டன் கிங் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஜான் கேம்பல் 105 பந்துகளை சந்தித்து 16 ரன்னில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 87 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 51 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.