null
வீடியோ: வங்கதேசம்- அயர்லாந்து டெஸ்ட் போட்டியில் நிலநடுக்கம்- வெளியேறிய ரசிகர்கள்
- வங்கதேசம்- அயர்லாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
- 3-வது நாள் ஆட்டமான இன்று அயர்லாந்து பேட்டிங் செய்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது.
வங்க தேசத்தில் இன்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தாக்கம் வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் எதிரொலித்தது. இதனால் ஆட்டம் 3 நிமிடம் தடைபட்டது. அனைத்து வீரர்களுகளும் தரையில் அமர்ந்து கொண்டனர். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
அயர்லாந்து அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய அயர்லாந்து அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.