அந்த நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது- ரோகித் குறித்து முன்னாள் வீரர் கருத்து
- ரோகித் உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருப்பதால் அதற்காக உடற்தகுதியை பராமரித்து வருகிறார்.
- அவர் சாதனைகளுக்காக விளையாடவில்லை.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் தொடங்கும் ஒருநாள் தொடர் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா சாதாரண வீரராகவே களமிறங்குகிறார்.
இவர் ஒருநாள் உலக கோப்பை 2027-ல் இடம் பெறுவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும் ஆஸ்திரேலியா தொடருடன் ரோகித் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 2027-ம் ஆண்டு உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் ரோகித் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் அந்த உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறார். அதற்காக உடற்தகுதியை பராமரித்து வருகிறார். 2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததிலிருந்து, உலக கோப்பையை வெல்லும் அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. அதை 2024 டி20 உலக கோப்பையில் அடைந்தார். ஆனால் அந்த நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அவர் 50 ஓவர்கள் உலக கோப்பையை வெல்ல விரும்புகிறார்.
அவர் சாதனைகளுக்காக விளையாடவில்லை. உலகக் கோப்பை இறுதியில் கூட, அவர் தொடக்கத்தில் விளையாடிய விதம், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் கொண்டு வருவதை காட்டியது.
என்று கார்த்திக் கூறினார்.