ODI-யில் அதிவேகமாக சதம் விளாசிய 2ஆவது வீராங்கனை: ஸ்மிரிதி மந்தனா சாதனை
- 28 பந்தில் அரைசதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
- ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 2ஆவது பேட்டர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.
அத்துடன் 13 சதங்களுடன், பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசி பேட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.