கிரிக்கெட் (Cricket)
null

3ஆவது இடத்திற்கு போட்டி இருக்கிறது என்பது சாய் சுதர்சனுக்கு தெரியும்: துணை பயிற்சியாளர்

Published On 2025-10-08 20:51 IST   |   Update On 2025-10-08 22:03:00 IST
  • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
  • டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன். இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி ரன்கள் குவித்தார். நேர்த்தியான ஸ்ட்ரோக் பிளேயர் என்பதால் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் இடம் பிடித்துள்ளார். சாய் சுதர்சன் 7 இன்னிங்சில் 147 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரேயொரு அரைசதம் அடங்கும். கடினமான 3ஆவது இடத்தில் இன்னும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அவர் காண்பிக்கவில்லை. இருந்தபோதிலும், அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரியன் டென் டோஸ்கேட், 3ஆவது இடத்திற்கு போதுமான பேட்ஸ்மேன்கள் காத்திருக்கிறார்கள் என்பது சாய் சுதர்சனுக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

சாய் சுதர்சன் பற்றி ரியன் டென் டோஸ்கேட் கூறியதாவது:-

சாய் சுதர்சனுக்கு கேப்டன் ஆதரவாக இருக்கிறார். கோச்சிங் ஸ்டாஃப் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை சாய் சுதர்சன் உணர்ந்துள்ளார் என்பது என்னால் உறுதியாக கூற முடியும். உறுதியளித்த அவருடைய திறமையான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என நாங்கள் உணர்கிறோம்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் ஜுரல் சிறப்பாக விளையாடினார். அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கும் வாய்ப்பை பெறலாம். முதல் மூன்று அல்லது நான்கு இடத்தில் விளையாட மற்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். சுப்மன் கில் தற்போது 4ஆவது இடத்தில் விளையாடி வருகிறார். ஆகவே, சாய் சுதர்சன் இதை அறிந்திருப்பார்.

அந்த மாதிரியான போட்டியை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதை நீங்கள் ஒரு தொழிலாகத் தொடரமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் சொன்ன மாதிரி, அவர் வெளியே சென்று நாம் நினைக்கும் அளவுக்கு ரன்கள் எடுக்க வேண்டும்.

ஒரு இடத்திற்காக போராடுகிறீர்கள் என்பதை அவரால் மறைக்க முடியாது. உங்களுக்குத் தெரியும், கருண் நாயர் இங்கிலாந்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அந்த இடத்திற்கு நிறைய நல்ல வீரர்கள் போராடுகிறார்கள். எனவே சாய் சுதர்சன் தன்னை நம்புவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து 3ஆவது இடம் அவருக்கு வழங்கியுள்ளோம்.

இவ்வாறு ரியன் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை.

Tags:    

Similar News