null
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்?
- ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஆசிய கோப்பை நடைபெற உள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்தார். 4-வது டெஸ்ட் போட்டியில் காலில் பந்து தாக்கியதில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. காயத்துடன் பேட்டிங் மட்டும் செய்தார். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலகினார்.
இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அவர் வருகிற செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை தவறவிடுவார். மேலும் அக்டோபர் 2-ந்தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது. ரிஷப் பண்ட் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட்டின் கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கு எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.