கிரிக்கெட் (Cricket)

136 ஆண்டுகளில் முதல் முறை.. ஃபாலோ ஆன் பெற்றும் சாதனை படைத்த பாகிஸ்தான்

Published On 2025-01-07 11:17 IST   |   Update On 2025-01-07 11:17:00 IST
  • தோல்வி சந்தித்த போதிலும், அந்த அணி சாதனை படைத்துள்ளது.
  • பாகிஸ்தான் அணி ஃபாலோ ஆன் பெற்று மீண்டும் பேட்டிங் செய்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்தத் தொடரில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்த போதிலும், அந்த அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களை அடித்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஃபாலோ ஆன் பெற்று மீண்டும் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான ஷான் மசூத் 145 ரன்களை குவித்தார். இவரை தவிர பாபர் அசாம் 81 ரன்களை அடித்தார். மற்ற வீரர்களும் அரைசதம் அடிக்கும் முயற்சியில் அவுட் ஆகி வெளியேறினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 478 ரன்களை எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா சென்று விளையாடிய அணிகளில் ஃபாலோ ஆன் பெற்று அதிக ரன்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் அடித்த 478 ரன்கள் தென் ஆப்பிரிக்கா மண்ணில் 136 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுற்றுப் பயணம் வந்த அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகியிருக்கிறது.

மேலும், தென் ஆப்பரிக்கா மண்ணில் வெளிநாட்டு அணியிர் 400 ரன்களை கடந்து இருப்பதும் இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக ஆஸ்திரேலியா அணி 1902 ஆம் ஆண்டு ஃபாலோ ஆன் பெற்று 372 ரன்களை அடித்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

Tags:    

Similar News