3-வது ஒருநாள் போட்டியிலும் தோல்வி: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து
- இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்தியது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி கள்மிறங்கிய நியூசிலாந்து 42 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக பிரேஸ்வெல் 59, ரைஸ் மாரியூ 58 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அகிஃப் ஜாவெத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் இமாம் காயமடைந்தார். ஒரு ரன் எடுக்க ஓடும் போது பீல்டர் கீப்பரிடம் வீசிய பந்து அவரது ஹெட்மெட்டுக்குள் புகுந்ததில் அவர் காயமடைந்தார். இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
இதனை தொடர்ந்து அப்துல்லா ஷஃபீக்- பாபர் அசாம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷஃபீக் 33 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அரை சதம் அடித்த (50) கையொடு பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 221 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.
முன்னதாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.