ஐசிசி தொடரில் நியூசிலாந்து 2019 முதல் 2025 வரை இறுதிப்போட்டிக்கு செல்ல வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் விலகல்
- தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
- கேரி ஸ்டீட்டின் வழிகாட்டுதலில் 2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து மகுடம் சூடியது.
வெலிங்டன்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார். இடையில், இரண்டு முறை அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதில் வெள்ளைநிற பந்து போட்டிக்கான (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) பயிற்சியாளர் பணியில் இருந்து மட்டும் விலகுவதாக ஸ்டீட் நேற்று அறிவித்தார்.
டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் மூன்று வடிவிலான போட்டிக்கும் வெவ்வேறு பயிற்சியாளரை நியமிப்பது குறித்து நியூசிலாந்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியிடும்.
53 வயதான கேரி ஸ்டீட்டின் பயிற்சியின் கீழ் நியூசிலாந்து அணி 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.
2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடியது, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது அவரது வழிகாட்டுதலில் முத்தாய்ப்பான வெற்றிகளாக அமைந்தன.