துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கத்திற்கு விளக்கம் வேண்டும்- முன்னாள் வீரர் காட்டம்
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.
- ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர். இதற்கு முன்பு, இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டிருந்தார்.
தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாத கில்லுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், இந்த விவகாரம் குறித்து தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முகமது கைப் கூறியதாவது:-
துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அக்சர் படேலுக்கு தேர்வுக்குழு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.
பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்து அவர் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது. அக்சர் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.
என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.