கோலியா- டெண்டுல்கரா? உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்? முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பதில்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி தனது 52-வது சதத்தை பதிவு செய்தார்.
- ஒரு வடிவில் அதிக சதம் அடித்த டெண்டுல்கரை (டெஸ்டில் 51 சதம்) விராட் கோலி முந்தினார்.
ராஞ்சி:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 52-வது சதத்தை (306-வது போட்டி) பதிவு செய்தார்.
இதன் மூலம் ஒரு வடிவில் அதிக சதம் அடித்த டெண்டுல்கரை (டெஸ்டில் 51 சதம்) அவர் முந்தினார்.
டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். அவரை 37 வயதான விராட் கோலி ஏற்கனவே முந்தி இருந்தார். ஒரு நாள் போட்டியில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா, டெண்டுல்கரா? என்ற விவாதம் எழுந்து உள்ளது.
இது குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-
விராட் கோலியுடன் ஆடியவர்களும் அவருக்கு எதிராக விளையாடியவர்களும் அவர் ஒருநாள் போட்டியில் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
ரிக்கிபாண்டிங்கும் அவரை ஒருநாள் போட்டியின் எல்லா கட்டத்திலும் ஒரு சிறந்த வீரர் என்று மதிப்பிட்டார். ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவது மிகவும் கடினமானது. நீங்கள் டெண்டுல்கரை கடந்து செல்லும் போது இந்த மனிதர் எங்கே நிற்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.