ரிஷப் பண்ட், வோக்ஸ் போல காயத்துடன் விளையாடிய வீரர்- வெளியான தகவல்
- ரிஷப் பண்ட் 4-வது டெஸ்ட் போட்டியில் போது காயத்துடன் விளையாடினார்.
- கிறிஸ் வோக்ஸ் 5-வது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடினார்.
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் (2-2) கணக்கில் சமநிலை அடைந்தது.
இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டனர். அதிலும் குறிப்பாக ரிஷப் பண்டுக்கு 4-வது டெஸ்ட் போட்டியின் போது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவரால் 5-வது போட்டியில் விளையாட முடியாமல் போனது.
அதேபோன்று இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான கிரிஸ் வோக்ஸ்சும் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார். இதில் ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணிக்கு தேவையான நிலையில் உடைந்த காலோடும், உடைந்த கையோடும் களத்திற்கு வந்து விளையாடியது பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை தவிர்த்து மேலும் ஒரு இந்திய வீரர் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவோடு விளையாடியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயருக்கு விரலில் சிறியளவு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் அணியின் சூழலை கணக்கில் கொண்டு அவர் அந்த எலும்பு முறிவுடனே பேட்டிங் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பினை பெற்ற அவர் இந்த தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்த வேளையில் இப்படி அவர் அர்ப்பணிப்புடன் விளையாடியது தெரிய வந்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதனால் எதிர்வரும் துலீப் டிராபி தொடரை அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.