கேப்டன் பும்ரா- வெளியான புதிய தகவல்
- டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர வாய்ப்பில்லை.
- டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து டி20 அணிக்கும் அவரை கேப்டனாக நியமிக்க டி20 அணியில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய கில், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதனால் ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அதனை தொடர்ந்து வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார்.
டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர வாய்ப்பில்லை. இதனால் அடுத்த டி20 அணியின் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஏனெனில் அவர் தான் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் டி20 உலககோப்பை அணிக்கான தொடரில் துணை கேப்டன். அதனால் அடுத்த கேப்டனாக அவர்தான் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அடுத்த இந்திய டி20 அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட உள்ளார் என பிசிசிஐ-யின் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ரோகித் சர்மாவுக்கு பிறகு அவர் தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கபட உள்ள நிலையில் காயம் காரணமாக அவர் கேப்டனாக நியமிக்கபடவில்லை. பும்ரா காயத்தால் அடிக்கடி வெளியேறுவதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்து கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
தற்போது பும்ரா தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுவதில்லை. குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அதிக அளவில் பங்கேற்பதில்லை. உலககோப்பைக்காக டி20 தொடரில் மட்டும் அதிக அளவில் பங்கேற்கிறார். மேலும் பும்ரா அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் அவரை டி20 அணிக்கு கேப்டனாக நியமித்து பார்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.