ஐ.பி.எல்.(IPL)
null

பிளே-ஆப் சுற்றுக்கு மல்லுக்கட்டும் 7 அணிகள்: யாருக்கு வாய்ப்பு அதிகம்?

Published On 2025-05-17 10:36 IST   |   Update On 2025-05-17 10:36:00 IST
  • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.
  • சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன.

பெங்களூரு:

திரில், பரபரப்பு என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் திடீரென ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. மீண்டும் அதே உத்வேகத்துடன் இன்று தொடங்கினாலும் ஆட்டம் முழுவீச்சில் சூடுபிடிக்க சில நாட்கள் ஆகலாம். மேலும் முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிக்காக கடைசி கட்டத்தில் கிளம்புவது அணிகளின் சரியான கலவையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதை எல்லாம் கணக்கு போட்டே சில அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்த்து வியூகங்களை தீட்டுகின்றன.

இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. 13 லீக் மட்டுமே மிஞ்சியுள்ளது. ஆனால் இன்னும் எந்த அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) உறுதி செய்யவில்லை. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன. மற்ற 7 அணிகள் பிளே-ஆப் சுற்றின் 4 இடத்துக்கு மல்லுக்கட்டுகின்றன.

புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.

3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணி மூட்டையை கட்டும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சந்திக்கும். இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இனி பிளே-ஆப் சுற்றை எட்டுவதற்கு வாய்ப்புள்ள அணிகள் எவை என்பதை பார்க்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ் (16 புள்ளி): புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் குஜராத் அணிக்கு மீதமுள்ள 3 ஆட்டங்களில் (டெல்லி, லக்னோ, சென்னைக்கு எதிராக) ஒன்றில் வென்றால் போதும். அடுத்து சுற்றை எட்டி விடும். மூன்றில் தோற்றால் கூட மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் வாய்ப்பு உண்டு. இதில் உள்ளூரில் இரு ஆட்டங்களில் ஆடுவது நிச்சயம் அனுகூலமாக இருக்கும். ஏனெனில் இந்த சீசனில் ஆமதாபாத்தில் ஆடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றிருக்கிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (16 புள்ளி): குஜராத் போன்றே பெங்களூரு அணியும் பிளே-ஆப் சுற்றை எட்டும் தூரத்தில் நிற்கிறது. அந்த அணிக்கு தேவை ஒரு வெற்றி. கொல்கத்தா, ஐதராபாத், லக்னோ அணிகளிடம் மோத வேண்டி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருப்பதால் பெங்களூரு அணி அடுத்த சுற்றை அடைவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.

பஞ்சாப் கிங்ஸ் (15 புள்ளி): தற்போதைய சூழலில் மீதமுள்ள 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, மும்பைக்கு எதிராக) பஞ்சாப் அணி 2-ல் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவை எதிர்நோக்கி இருக்க வேண்டும். மூன்றிலும் தோற்றால் ஏறக்குறைய அவுட் தான். 2014-ம் ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றுக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளி): ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி இரு லீக்கில் டெல்லி, பஞ்சாப்பை பதம் பார்த்தால் கம்பீரமாக பிளே-ஆப் சுற்றுக்குள் பயணிக்கலாம். ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் தயவை தேட வேண்டி இருக்கும். ரன்ரேட்டில் (+1.156) நல்ல நிலையில் இருப்பது பலமாகும். இரண்டிலும் தோற்றால் அத்துடன் வெளியேற வேண்டியது தான்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் (13 புள்ளி): கடைசி 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி எழுச்சி பெற்றால் தான் தப்பிக்க முடியும். எஞ்சிய 3 ஆட்டத்திலும் (குஜராத், மும்பை, பஞ்சாப்புக்கு எதிராக) வாகை சூடினால் பிளே-ஆப் கனவு நனவாகும். மாறாக இரண்டில் மட்டும் வெற்றி கிடைத்தால் 17 புள்ளியை அடையும். அப்போது மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (11 புள்ளி): நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு நூலிழை அளவுக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது. முதலில் அந்த அணி தனது கடைசி இரு லீக்கிலும் (பெங்களூரு, ஐதராபாத்துக்கு எதிராக) வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு மும்பை அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் மண்ணை கவ்வ வேண்டும். டெல்லி அணி 3 ஆட்டங்களில் 2-ல் அடங்க வேண்டும். லக்னோ அணி 3-ல் ஒன்றில் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் கொல்கத்தா, டெல்லி அணிகள் தலா 15 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு போட்டியிடும். அப்போது ரன்ரேட்டில் வலுவாக இருந்தால் கொல்கத்தாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (10 புள்ளி): உத்வேகத்தை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் லக்னோ அணி கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியது. தங்களுக்குரிய இறுதி 3 ஆட்டங்களிலும் (ஐதராபாத், குஜராத், பெங்களூருவுக்கு எதிராக) வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும். அதுவும் மற்ற அணிகளின் முடிவுகள் கைகொடுக்கவேண்டும். ஒன்றில் தோற்றாலும் அம்பேல் தான்.

Tags:    

Similar News