null
2-வது டெஸ்டிலும் வெற்றி- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றியது இந்தியா
- 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ரோஸ்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 518 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது.
இந்தியா 'பாலோ-ஆன்' வழங்கியதால் 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் (87 ரன்), ஷாய் ஹோப் (66 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த கேம்ப்பெல் சிறிது நேரத்தில் தனது 'கன்னி' சதத்தை நிறைவு செய்தார். ஜடேஜாவின் பந்தில் மெகா சிக்சரோடு மூன்று இலக்கத்தை தொட்டார். 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பை பெற்றார்.
அணியின் ஸ்கோர் 212 ஆக உயர்ந்த போது, கேம்ப்பெல் (115 ரன், 199 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) ஜடேஜாவின் சுழலில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.
4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன், கேப்டன் ரோஸ்டன் சேஸ் இணைந்தார். இருவரும் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். அபாரமாக ஆடிய ஷாய் ஹோப் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 3-வது சதத்தை எட்டினார். டெஸ்டில் 8 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். ஆனால் செஞ்சுரிக்கு பிறகு நிலைக்கவில்லை. முகமது சிராஜ் வீசிய பந்தை ஷாய் ஹோப் (103 ரன், 214 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்த போது பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. கேப்டன் ரோஸ்டன் சேஸ் தனது பங்குக்கு 40 ரன்கள் (72 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். விக்கெட் கீப்பர் டெவின் இம்லாச் 12 ரன்னில் வெளியேற்றப்பட்டார். ஒரு கட்டத்தில் அந்த அணி 311 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 10-வது விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்சும், ஜெய்டன் சீல்சும் கைகோர்த்து இந்திய பவுலர்களுக்கு 'தண்ணி' காட்டினர். 22 ஓவர்கள் சமாளித்த இவர்கள் தங்களது முன்னிலை ஸ்கோரை 100-க்கு மேல் தாண்ட வைத்து அசத்தினர். தொல்லை கொடுத்த இந்த ஜோடியை ஒரு வழியாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிரித்தார். அவர் வீசிய பந்தை தூக்கியடித்து சீல்ஸ் (32 ரன், 67 பந்து) கேட்ச் ஆனார்.
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 118.5 ஓவர்களில் 390 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்கு இவர்கள் 79 ரன்கள் திரட்டினர். கிரீவ்ஸ் 50 ரன்களுடன் (85 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியாவுக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் (8 ரன்) வாரிகனின் சுழலில் சிக்கினார்.
இதன் பின்னர் லோகேஷ் ராகுலும் (25 ரன், நாட் அவுட்), சாய்சுதர்சனும் (30 ரன், நாட் அவுட்) மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 63 ரன் எடுத்தது.
இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. சாய் சுதர்சன் 39 ரன் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் சுப்மன் கில் 13 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 35.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2 -வது டெஸ்டின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும் இந்த தொடரின் தொடர் நாயகனாக ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டனர்.