ஜோ ரூட் சதம்: ஸ்மித், கார்ஸ் அரைசதம்- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்ப்பு..!
- ஜோ ரூட் சதம் அடிக்க ஸ்மித் மற்றும் கார்ஸ் அரைசதம் அடித்தனர்.
- பும்ரா 5 விக்கெட் வீ்ழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவும் இடம் பிடித்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அதிவிரைவாக ரன்கள் குவிக்க திணறினர். ஜோ ரூட் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். இது அவரின் 37ஆவது டெஸ்ட் சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஸ்டோக்ஸ் 44 பந்தில் பும்ரா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். இவர் 5 ரன்கள் எடுத்திருக்கும்போது முகமது சிராஜ் பந்தில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் கே.எல். ராகுல் எளிதான கேட்சை பிடிக்க தவறினார். இந்த கேட்ச் மிஸ் இந்தியாவுக்கு பின்னர் தலைவலியாக அமைந்தது.
மறுமுனையில் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். பும்ரா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் இங்கிலாந்து 271 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஸ்மித் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 350 ரன்னைக் கடந்தது.
2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஸ்மித் 51 ரன்களுடனும், கார்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் 51 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித்-கார்ஸ் ஜோடி 84 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஆர்ச்சரை பும்ரா வீழ்த்தினார். இதன்மூலம் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி விக்கெட்டுக்கு பஷீர் களம் இறங்கினார். கார்ஸ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால் அரைசதம் கடந்தார். இறுதியாக 56 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இந்திய அணியில் சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார்.