டெத் ஓவரில் அதிரடி காட்டிய சுனில் கிருஷ்ணா- திண்டுக்கல் அணிக்கு 181 ரன்கள் இலக்கு
- சேப்பாக் அணி தரப்பில் பாபா அபரஜித் 56 ரன்கள் எடுத்தார்.
- திண்டுக்கல் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சேலம்:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஆஷிக் - மோகித் களமிறங்கினர். இதில் ஆஷிக் 12 ரன்னிலும் மோகித் 4 ரன்னிலும் அடுத்து வந்த ஜெகதீசன் 11 ரன்னிலும் வெளியேறினார்.
இதனையடுத்து விஜய் சங்கர் மற்றும் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 26 ரன்னிலும் வெளியேறினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபரஜித் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் 56 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஸ்வப்னில் சிங் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த சுனில் கிருஷ்ணா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.